Wednesday, February 15, 2017

காதலர் தின குறிப்புகள்!

  • காதலர் தின கன்னராவியை எல்லாம் கொண்டாடியே தீர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. நம் கலாச்சாரத்தில் சேர்த்தி இல்லை என்று சாய்சில் விட்டு விடலாம்
  • கொண்டாடியே தீர வேண்டும் என்று முடிவு செய்தால், நெரிசல், கார் கொள்ளை (Surge) இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல், சிரமம் பார்க்காமல், பார்க், பீச், ஹோட்டல் என்று வெளியே கிளம்பி விடுவது புத்திசாலிகளுக்கு அழகு
  • தனித்துவமாக, வித்தியாசமாக வீட்டில் கொண்டாடலாம் என்று கொள்கை இருந்தாலும், ஸ்விக்கி துணை என்று ஆன்லைனில் ஆர்டர் செய்வது உத்தமம். ஆர்டர் செய்ததை மறைக்க மெழுகுவர்த்தி எல்லாம் ஏற்றி வீட்டை விடுதியாக்க முயற்சிப்பது எல்லாம் வீண்வேலை!
  • பிப்ரவரி மாதத்தில் நாட்கள் குறைவு என்ற காரணத்தால் மாதக்  கடைசி சற்றே முன்பாக வந்து விடுவதால் தானே வெளியே போகாமல் வீட்டிலேயே விழா கொண்டாடுகிறோம். பண்டிகை என்று நினைத்து மடியாக ஏன் நாமே சமைத்து, சேமித்து அசத்தக் கூடாது  என்று எண்ணம் வந்தால் நன்றாகத் தெரிந்த, அவ்வப்போது சமைக்கும் தோசை, மேகி போன்றவற்றையே சமைக்கவும். வேண்டுமென்றால் அதில் இதயம் ,அம்பு இத்யாதி ஆகியவற்றை வரைய முயற்சிக்கலாம். அதிக கேடு இல்லை. அதிகம் போனால், ஒரு கரண்டி மாவு. கடவுளுக்கு, காக்காவுக்கு என்று தாண்டி சென்று விடலாம்/
  •  அதையும் தாண்டி காதலர் தினம்டா, கலக்குவோம்டா  மாஸ்டர்டா என்று கண்டதை எல்லாம் முயற்சிக்க கூடாது. இதை தான் தேவ பாஷையில் வினாசே காலே வீபரீத புத்தி என்கிறார்கள். அப்படி வரும் வீபரீத புத்திக்கு பிரயாசித்தமாக, செய்ததை பிரசாதம் போல் சாப்பிட்டு  மீதியை வாட்ச்மேனுக்கு கொடுத்து விடலாம். வாட்ச் மேன் விடும் சாபத்திற்கு வரும் கருட  புராண தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு அப்படியே சிவ, சிவ என்றோ ராமா கிருஷ்ணா என்றோ சைவ/வைணவ வெறிக்கு தகுந்தவாறு சொல்லிக் கொண்டு படுத்து விட்டால் பண்டிகை, விரதம் மற்றும் புண்ணியம் என்று கூட்டிக் கழித்து கணக்கு சரியாக வந்து விடும். 
  • அப்புறம் எவ்வளவு நேரமானாலும், ராமானுஜர் வழித்தோன்றலாக இதை எல்லாம் ஊருக்கும், வரும் பிற்கால சந்ததியினர் நன்மை கருதியும் இப்படி கல்வெட்டில் எழுதி வைத்து விடலாம்.
  • மிக முக்கிய குறிப்பு: வருடத்திற்கு ஒரு முறை வரும் காதலர் தினம் எல்லாம் காதலிக்க நினைப்பவர்களுக்கும் காதலர்களுக்கும் தான். கல்யாணமானவர்களுக்கும் கூடி குடித்தனம் நடத்துபவர்களுக்கும் (Live-In Relationship) சமையல், வீட்டு வேலை எல்லாம் செய்து முடிக்கும் நாள் , ஏன்  சமையல், வீட்டு வேலையில் உதவி செய்யும் நாள் எல்லாமே காதலர் தினம் தான்!
  • மிக மிக முக்கிய குறிப்பு: இவை எல்லாம் ஆண்களுக்கான குறிப்பு என்று நினைக்கும் ஆண்கள் சத்தியமாய் இந்த ஜென்மத்தில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாட மாட்டார்கள்!

No comments: